கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- தகுதியுள்ள பணியாளர்களுக்கு வாரத்தில் ஏழு நாள்கள் 24 மணி நேரப் பாதுகாப்பிற்காக SKBBK எனப்படும் வேலை சாராத விபத்துத் திட்டத்திற்கான சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சு எதிர்பார்க்கிறது.
கடந்தாண்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, அத்திட்டத்திற்கான சட்டத் திருத்த செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
SKBBK ஒரு புதிய திட்டமல்ல; மாறாக, அது முந்தைய அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த ஒன்றாகும்.
பணியில் இருக்கும்போது மட்டுமல்லாமல், அதற்கு அப்பாற்பட்ட நேரத்தில் பேரிடர்கள் ஏற்பட நேரிட்டாலும் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை அதுவென்று ஸ்டீவன் சிம் விவரித்தார்.
''எந்த தடையும் இல்லையென்றால் நாங்கள் இதை முன்வைப்போம். எனவே, இந்த வேலை சாராத விபத்துத் திட்டத்திற்கும் இதுவே பொருந்தும். இது உண்மையில் முந்தைய அரசாங்கத்தால் மட்டுமல்ல, தொழிற்சங்க உறுப்பினர்களாலும் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில், அவர்கள் இதை தொழிலாளர்களுக்கான மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகப் பார்க்கிறார்கள். வேலையின் போது அல்லது அது தொடர்பான பாதுகாப்பாக மட்டுமல்ல; மாறாக, பணிக்கு வெளியே விபத்து ஏற்படும்போது கூட உதவுவதே இதன் நோக்கம்,'' என்றார் அவர்.
தகுதியுள்ள பணியாளர்களுக்கு அவர்களின் பணிபுரியும் காலக்கட்டத்தில் 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக SKBBK-ஐ செயல்படுத்த அமைச்சு கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி திட்டமிட்டிருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]