உலகம்

பெரும்பாலான நாடுகளில் இன்று நோன்பு தொடங்கியது

02/03/2025 08:20 PM

பாகிஸ்தான், 02 மார்ச் (பெர்னாமா) -- நோன்பு முதல் நாள் முன்னிட்டு, நேற்று மாலை பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் சிறப்பு ரமலான் தொழுகைக்காக அந்நாட்டின் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் திரண்டனர்.

பாகிஸ்தானில், ரமலான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நேற்று தொழுகைக்குப் பின்னர், கராச்சி மக்கள் சுஹோர் அதாவது ரமலானின் நோன்பு முதல் நாளுக்கு முன் உண்ணும் உணவை தயார் செய்ய இறுதி நேர பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது.

பாகிஸ்தானில் நோன்பு முதல் நாள் தேதி ஞாயிற்றுக்கிழமை தோன்றும் புதிய பிறையைப் பார்த்து தொடங்கப்படும்.

உலகின் பிற பகுதிகளில் நோன்பு தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகே பாகிஸ்தானில் நோன்பு தொடங்குகிறது.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

அந்நாட்டில் உள்ள 24 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.

மேலும் அவர்களில் பெரும்பாலோர் புனித மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள்.

 

ஜெருசலேம்

இதனிடையே, நோன்பு மாதத்தை முன்னிட்டு, ஜெருசலேமில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் அல்-அக்சா மசூதியில் தொழுகைக்காகக் கூடினர்.

பாரம்பரியமாக பிறை பார்ப்பதைப் பொறுத்து இஸ்லாமியர்களுக்கு நோன்பு மாதம் தொடங்கின்றது.

தினசரி நோன்பு என்பது, விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.

உணவு, பானங்களைத் தவிர்த்து வயிற்றுக்கும் குடலுக்கும் மட்டுமின்றி, நோன்பு என்பது உள்ளத்திற்கும் நல்ல எண்ணத்திற்கும் சேர்த்தே கடைபிடிக்கப்படுகிறது.

நோன்பு நோற்பவர்கள், தீய செயல்களிலிருந்து விலகி, நல்லவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

காசா

மற்றொரு நிலவரத்தில், ரமலான் மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை காசாவில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் ரஃபாவின் இடிபாடுகளுக்கு மத்தியிலும் தொழுகைக்கு வந்தனர்.

வீடுகள் இடிந்து விழுந்தா நிலையிலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் மீண்டும் தொடங்கும் என்ற அச்சத்திலும் காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் ரமலான் மாதத்தை வரவேற்றனர்.

''எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மற்றும் முகாமில் உள்ள அனைத்து மக்களுடன் நோன்பை திறப்பதில் மகிழ்யடைகிறேன். அதே வேளையில், எங்களின் வீடுகள் இடிந்து கிடைப்பதை காணும்போது கவலையாக உள்ளது,'' என்று ரஃபா குடியிருப்பாளர் முஹ்மட் ஜோடா தெரிவித்தார்.

முதல் கட்ட போர் நிறுத்தம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

ஆனால், ஒப்பந்தத்தின் படி, இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கும் போது சண்டை மீண்டும் தொடங்கக் கூடாது.

இஸ்ரேல், கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் கெய்ரோவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)