பொது

வளர்ப்பு பிராணிகளை இனியும் கருணை கொலை செய்யாதீர்

23/04/2025 05:31 PM

கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) --    வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சிலர் அதீத அன்பு செலுத்தி வளர்ப்பதைப் பார்த்துள்ளோம்.

அதே நேரத்தில் சில வளர்ப்பு பிராணிகளை அடித்து கொடுமைப்படுத்துவதும், உணவு நீர் கொடுக்காமல் தனித்து விட்டுச் செல்லும் இறக்கமற்ற சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இத்தகைய செயல்களுக்கு பிராணிகள் நல அமைப்பும், கால்நடை சேவைத் துறையும் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், அண்மையில், கெடா கோலா கெட்டிலில், ஐவரைத் தாக்கிய தனது சொந்த நாய்களைக் கருணைக் கொலை செய்வதற்கு ஒப்புக் கொண்ட உரிமையாளரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் ஐவரைத் கடித்து காயப்படுத்திய இரண்டு ரோட்வீலர் ரக நாய்கள், ஆவேசமான நாய் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும், அவற்றிற்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டிருந்தால், அவை உரிமையாளரின் கட்டளைக்கு இணங்கியிருக்கும்.

ஆனால், உரிமையாளரின் அலட்சியத்திற்கும், நாய்களுக்கு முறையாக பயிற்சி அளித்து பராமரிக்காத அவரின் தவற்றிற்கும், வளர்ப்பு பிராணிகளைக் கொல்வது கண்டிக்கத்தக்கது என்று SAFM எனப்படும் மலேசிய கைவிடப்பட்ட பிராணிகள் இயக்கத்தின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

Pomeranian, Chihuahua, Shih Tzu, Poodle,Chowsky ஆகிய இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு மென்மையான பண்புகளைக் கொண்டிருப்பதால் அவற்றிற்கு அதிகமான பயிற்சிகள் தேவைப்படாது.

ஆனால், Rottweiler, German Shepherd, American Pit Bull, Dobermann போன்று சட்டென கோபம் கொண்டு எதிராளிகளைத் தாக்கும் தன்மையுடைய நாய்களை வாங்கி வளர்க்க விரும்புவோர், முதலில் அவற்றிற்கு முறையான பயிற்சியை வழங்குவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பாதசாரிகளை ரோட்வீலர் நாய்கள் கடித்தது தவறு என்றாலும், அப்பிரச்சினைக்குக் கருணை கொலை தீர்வாகாது.

மாறாக, நாய்களைக் கையாள்வதில் அல்லது பயிற்சி அளிப்பதில் அனுபவம் பெற்ற தரப்பினரிடம் அவற்றை தத்துக் கொடுத்திருக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

அதேவேளையில், வீட்டில் எவ்வகை நாய்களை வளர்த்தாலும், அவற்றிற்கு முறையாக MKA சான்றிதழை அதன் உரிமையாளர்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கலைவாணன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இவ்விரு நாய்கள் கொல்லப்பட்டது குறித்து கைவிடப்பட்ட பிராணிகளின் மீட்பாளர்கள் சிலரும் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

வளர்ப்பு பிராணிகளுக்கு இத்தகைய கொடுமைகள் நிகழாமல் தடுக்க, பிரச்சனைக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு உரிய தீர்வோ தண்டனையோ வழங்க வேண்டும்.

அதை விடுத்து, செல்ல வளர்ப்பு பிராணிகளை கொல்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)