பொது

பாதிக்கப்பட்டவர்கள் 10,000 ரிங்கிட் உதவி நிதியைப் பெறுவர்

07/04/2025 05:46 PM

ஷா ஆலம், 07 ஏப்ரல் (பெர்னாமா) --   புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 437 வீடுகளைச் சேர்ந்த மொத்தம் 219 குடும்பங்கள் மாநில பேரிடர் நிர்வகிப்பு பிரிவின் தற்காலிக நிவாரண மையம் பிபிஎஸ்ஸில் பதிவு செய்திருக்கும் நிலையில், இன்று மாலை தொடங்கி மொத்தம் பத்தாயிரம் ரிங்கிட் உதவி நிதியை அவர்கள் பெறுவர்.

முற்றிலும் தீயில் அழிந்த வீடுகளுக்கு மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பெட்ரோனாஸ் ஐந்தாயிரம் ரிங்கிட்டையும் மத்திய அரசாங்கம் கூடுதலாக ஐந்தாயிரம் ரிங்கிட்டையும் வழங்குவதாக சிலாங்கூர் மாநில மந்திர புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஒரு பகுதி மட்டும் அழிந்த வீடுகளின் உரிமையாளர்களுக்குப் பெட்ரோனாஸ் இரண்டாயிரத்து 500 ரிங்கிட்டும் மற்றும் மத்திய அரசாங்கம் இரண்டாயிரத்து 500 ரிங்கிட்டும் வழங்குவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் கூறினார்.

இதில் ஒரு பகுதி அழிந்த வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களும் அடங்குவர்.

"இன்று 219 குடும்பங்களுக்கு வழங்கப்படும். அவர்கள் தனிப்பட்ட முறையில் அழைக்கப்படுவர். பி.பி.எஸ்-இல் வருகையை உறுதிப்படுத்தியப் பின்னர், அடுத்தடுத்து வெள்ளிக்கிழமை வரை மத்திய அரசாங்கம் மற்றும் பெட்ரோனாஸிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுவார்கள்", என்று அவர் கூறினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடகை செலவுகளையும் மாநில அரசாங்கம் ஈடு செய்யும் என்று அமிருடின் கூறினார்.

613 குடும்பங்களை உட்படுத்தி 73 லட்சத்து 56 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)