பண்டார் ஶ்ரீ டாமான்சாரா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- கெஅடிலான் கட்சியில் கிளை அளவிலான தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், உறுப்பினர்களின் முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தேர்தல் சம்பந்தப்பட்ட ஆட்சேபங்கள் மற்றும் புகார்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும் மத்திய தலைமைத்துவ மன்றம் எம்.பி.பி அளவில் முடிவு செய்யப்படும் என்று அதன் தகவல் பிரிவு முதலாவது துணை தலைவர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சி தொடக்கத்தில் இருந்தே தேர்தல் நடைமுறைகளை நியாயமாக நடத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருவதை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
''எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலம் இருக்கிறது. மேல்முறையீட்டிற்கு காலம் இருக்கிறது. அந்த செயல்முறை முடியட்டும். அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. அது ஜே.பி.பி-க்கு போகும். அதன் முடிவுகள் எம்.பி.பி-க்கு கொண்டுச் செல்லப்படும். எம்.பி.பி-இல் ஒரு முடிவு எடுக்கப்படும். எனவே, நாம் அதற்கு காத்திருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் நடைபெற்ற A-I-M எனப்படும் AMANAH IKHTIAR MALAYSIA நிறுவனத்தின் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் ரமணன் அவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, ஏப்ரல் 12ஆம் தேதி கெஅடிலான் கட்சியின் சுங்கை பூலோ கிளை தேர்தலில் ரமணன் தலைமையிலான அணி அனைத்து முக்கிய பதவிகளையும் வென்றது.
மற்றொரு நிலவரத்தில், A-I-M உட்பட சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திலும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை பெறுவதற்கான வாய்ப்பை குறு தொழில்முனைவோர் பெற வேண்டும் என்று ரமணன் தெரிவித்தார்.
தங்களின் வர்த்தகத்தை நிர்வகிக்க உதவிகள் தேவைப்படும் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஆதரவு வழங்க A-I-M எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக செயல்படும் A-I-M சரியான தடத்தில் பயணிப்பதை இது காட்டுவதாக ரமணன் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)