பொது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்திற்கு மனிதர்களின் அலட்சிய போக்கு காரணமாக இருக்கலாம்

07/04/2025 05:53 PM

புத்ரா ஹைட்ஸ், 07 ஏப்ரல் (பெர்னாமா) --   சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் குறித்து போலீஸ் மேற்கொண்டிருக்கும் விசாரணை தற்போது, குற்றவியல் கூறுகள் அல்லது மனிதர்களின் அலட்சியப் போக்கு எனும் சாத்தியத்தில் இயக்கப்படுகிறது.

இன்று, சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தில் தற்போதைய நிலவரங்களையும், அது குறித்த விளக்கத்தையும் கேட்டறிந்த பின்னர், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன், அதனை கூறினார்.

''எங்களின் விசாரணை குற்றவியல் கூறுகள் அல்லது அலட்சியப் போக்கிற்கு வழிவகுக்கின்றது. இது மனிதர்களின் அலட்சியப் போக்கு மட்டுமல்ல. நிலத்தின் கீழ் இயக்கங்கள் இருந்தாலும், குழாயின் அழுத்தம் அதிகமாக இருந்தாலும், இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன'', என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் அளித்த விளக்கத்தைக் கேட்டறிந்த பின்னர், அவர் அதனை கூறினார்.

மேலும், பாதுகாப்பு கருதி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையின் தடயவியல் நிபுணர்கள் ‘Ground Zero’ எனப்படும் நிலத்தின் உள்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த எங்களின் தடயவியல் நிபுணர்கள் உள்ளே நுழைந்து பாதுகாப்பை உறுதிச் செய்ய முயற்சிக்கின்றனர். எனவே, கிரவுண்ட் சீரோவில் தடயவியல் விசாரணையை தீயணைப்புத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்பதை தீயணைப்புத் துறை தீர்மானிக்கும். எங்களுக்கும் பயமாக இருக்கின்றது. நிலத்தின் உறுதித் தன்மை எங்களுக்குத் தெரியாது'', என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)