கோலாலம்பூர், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய, 109 நிலச் சொத்து மேம்பாட்டாளர்களை, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.
வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
“மேம்பாட்டாளர்களை கறுப்பு பட்டியலிட்டிருக்கும் எங்களது நடவடிக்கை, அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், நாங்கள் சமரசம் கொள்ள மாட்டோம் என்ற செய்தி சேர்ந்திருக்கும். வீடு வாங்குபவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கவும், அவர்கள் தகுதியான வீட்டைப் பெறுவதை உறுதி செய்யவும் நாங்கள் இந்நடவடிக்கையை எடுக்கின்றோம்,” என்றார் அவர்.
இன்று, 14-ஆவது மலிவு விலை வீடமைப்பு திட்டத்தின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு, உரையாற்றியப் பின்னர், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
கட்டுமானம் குறித்த தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க தவறியது, இருப்புநிலை மற்றும் லாப நஷ்ட உள்ளிட்ட தணிக்கை அறிக்கைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க தவறியது போன்ற தவறுகளையும் மேம்பாட்டாளர்கள் செய்திருப்பதாக, ஙா சுட்டிக் காட்டினார்.
நிலுவையில் உள்ள அபராதங்களைச் செலுத்தும் வரை, கறுப்புப் பட்டியலில் உள்ள மேம்பாட்டாளர்கள், புதிய உரிமங்களுக்கு விண்ணபிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)