கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருக்கும் நிலையில் ஆசியான் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளில் ஒன்றான ASEAN PLUS THREE போன்ற வியூக தளங்கள், புத்துயிர் பெறுவதற்கு ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அடிப்படை நோக்கத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், கொள்கை அளவில் அதனைச் சரிசெய்ய இன்னும் வாய்ப்பு உள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இது தொடர்பாகக் கலந்துரையாடலை மேற்கொள்ள மலேசியா தனது அதிகாரிகளை வாஷிங்டனுக்கு அனுப்பும் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் உறுதியான வர்த்தக பங்காளிகளாக ஆசியான் உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும், நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
"பரஸ்பர நன்மை பயக்கும் விளைவை அடைவதற்கு, அமெரிக்காவுடன் முன்கூட்டியே ஈடுபடுவதும், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா, குறிப்பாக சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய வர்த்தகச் சந்தைகளுடன் நமது (மலேசியா) உறவுகளை பன்முகப்படுத்துவதும் வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 ஆசியான் முதலீட்டு மாநாட்டில் அன்வார் உரையாற்றினார்.
முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றில் ஆசியானின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)