புத்ராஜெயா, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக, 'Good Samaritan Law’ எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தை சுகாதார அமைச்சின் மருத்துவ மேம்பாட்டுப் பிரிவும் சட்ட விவகாரப் பிரிவு B-H-E-U-U-வும் வரைந்து வருகிறது.
திடீர் மாரடைப்பு அல்லது நுரையீரல் செயல்பாட்டின் திடீர் நிறுத்தத்தை மீண்டும் துடிக்க வைப்பதற்கான சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில் உதவும் பொதுமக்களைப் பாதுகாக்க இச்சட்டம் அவசியமானது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
"சமாரித்தான் சட்டத்தின் இயற்றல் என்பது ஏஇடி கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, பிற விஷயங்களையும் அது பாதுகாக்கக்கூடும். உதாரணமாக, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்ற விரும்பும் சூழ்நிலையில், சில நேரங்களில் சில காயங்களும் விபத்துகளும் ஏற்படும். அவை முற்றிலும் தற்செயலாக நிகழும். அதனால் தான் இந்த சமாரித்தான் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. வளர்ச்சி கண்ட நாடுகளில் அச்சட்டம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.
சி.பி.ஆர் குறித்த திறனை வளர்ப்பதற்கும், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் ஏ.இ.டி சிகிச்சைக்கான இயந்திர பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் இந்த அணுகுமுறைக்கு நாடு தழுவிய கூட்டு உறுதிப்பாடு அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதில் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூகம் ஆகியவை உட்படுத்தப்பட்டிருப்பதையும் டாக்டர் சுல்கிப்ளி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, மாரடைப்புக்குப் பின்னர் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் ஏ.இ.டி பயன்படுத்தப்பட்டால், உயிர்வாழும் சாத்தியம் 50 முதல் 70 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, சிகரெட்களைக் காட்சிப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்தும் டாக்டர் சுல்கிப்ளி கருத்துரைத்தார்.
விற்பனை முகப்புகளில் சிகரெட்களை காட்சிப்படுத்தும் அல்லது அத்தடையைப் பின்பற்றாத எந்தவொரு தரப்பினருக்கும் சுகாதார அமைச்சு விதிமீறல் எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிடும் என்று அவர் கூறினார்.
அக்டோபர் முதலாம் தேதி வரை 51,000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களை உள்ளடக்கிய இந்த தடை, கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படுவதாக சுல்கிப்ளி தெரிவித்தார்.
"பின்பற்றவில்லை என்றால், நாங்கள் ஒரு எச்சரிக்கை அறிவிக்கை அல்லது எச்சரிக்கையை வெளியிடுவோம். எனவே அக்டோபர் முதலாம் தேதி வரை சிறிது அவகாசம் வழங்குகிறோம். கட்டுப்பாடுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், எச்சரிக்கை அறிவிப்பு அல்லது எச்சரிக்கையை வெளியிடுவதன் மூலம் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி வரை அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி முதல், 2024-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 852 மற்றும் அதன் கீழ் உள்ள தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதற்கு ஏற்ப, இத்தடை செயல்படுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)