கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) - அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய வரிவிதிப்பைத் தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கோலாலம்பூரில் முத்தரப்பு சந்திப்பை நடத்தின.
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை, வர்த்தகம், வணிகம் மற்றும் பயனீட்டாளர் நம்பிக்கையைப் பாதிப்பதோடு அரசதந்திர உறவுகளையும் சிக்கலாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் தத்தம் பொருளாதார நிலை குறித்து உயர் அதிகாரிகள் இன்று விவாதித்தாக நம்பப்படுகிறது.
12-வது ஆசியான் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், AFMGM-இன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த முத்தரப்பு சந்திப்பில், சீனாவின் நிதி துணை அமைச்சர் Liao Min, ஜப்பானின் நிதி துணை அமைச்சர் Atsushi Mimura, தென் கொரியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Choi Jiyoung ஆகியோர் பங்கேற்றனர்.
மார்ச் 30-ஆம் தேதி அனைத்து நாடுகளுக்கும் பத்து விழுக்காட்டு அடிப்படை வரியை, டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இம்மூன்று பெரிய பொருளாதார நாடுகள் மீதான கவனம் அதிகரித்தது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 34 விழுக்காடு வரியை எதிர்கொள்ளும் சீனா மற்றும் 24 விழுக்காடு வரி விதிக்கப்படும் ஜப்பான் உட்பட சில நாடுகளுக்கு அதிகமான பரஸ்பர வரிகள் விதிக்கப்பட்டன.
தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் வரி விகிதத்தை 25 விழுக்காட்டிற்கு குறைக்க முயற்சித்து வருகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் கூடுதலாக 34 விழுக்காட்டு வரியை விதித்ததன் மூலம் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால், நேற்று உலக சந்தை சரிந்ததோடு, முக்கிய பங்குச் சந்தைகளில் இருந்து 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, உள்நாட்டில், Bursa Malaysia பங்குச் சந்தை மூலதன மதிப்பீட்டில் 9,315 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)