பொது

கேபிள் திருட்டு & துண்டிப்பினால் ரயில் சேவையில் சுணக்கம் - ஈ.ஆர்.எல்

09/04/2025 01:35 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- ரயில் கேபிள் திருட்டு மற்றும் துண்டிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களால் EXPRESS RAIL LINK, ERL (ஈ.ஆர்.எல்) நிறுவனம் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பண்டார் தாசிக் செலத்தான் ரயில் நிலையத்தின் சமிக்ஞை அமைப்பிலும் பாதிப்பு உண்டானதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஈ.ஆர்.எல் தெரிவித்தது.

முழு சேவையையும் சரிசெய்யும் வகையில் தனது தரப்பு பணியாற்றி வருவதாகவும் இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியது.

புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா நிலையங்களுக்கும் கே.எல் செண்ட்ரல் நிலையத்திற்கும் இடையிலான சேவை 20 நிமிட இடைவெளியில் அதிகாலை மணி 6.20-க்கு தொடங்குகிறது.

கே.எல்.ஐ.ஏ-வின் முனையம் ஒன்று மற்றும் இரண்டிற்கும், சாலாக் திங்கி நிலையத்திற்கும் இடையே அதிகாலை மணி 6.20 தொடங்கி 20 நிமிட இடைவெளியில் ஒரு சேவையும் கிடைக்கிறது.

இந்த குற்றச்செயல்களைத் தொடர்ந்து, பண்டார் தாசிக் செலத்தான் நிலையத்தின் சமிக்ஞை அமைப்பில் இடையூறு ஏற்பட்டதால், செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.57-க்கு அனைத்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா நிலையங்களிலிருந்து கே.எல் செண்ட்ரல் நோக்கிச் செல்லும் பயணிகள் மாற்று போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]