ஷா ஆலம், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மாதம் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை, நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில் MyJPJ செயலியின் மூலம் புகைப்படம் மற்றும் காணொளி வடிவில் 6,687 புகார்களைச் சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே பெற்றுள்ளது.
அவற்றுள், 1,766 இரட்டைக் கோட்டில் வாகனங்களை முந்திச் செல்வது, 1,625 அவசர பாதையில் வாகனங்களைச் செலுத்துவது மற்றும் 843 சமிக்ஞை விளக்கைப் பின்பற்ற தவறியது என மூன்று முக்கிய குற்றங்களில் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பதிவாகியுள்ளன.
MyJPJ செயலியின் புகார்கள் வழங்கும் பிரிவு ஆண்டு முழுவதும் செயலில் இருக்கும்.
இருப்பினும், பண்டிகை காலத்தின் இரண்டு வாரங்களில் மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியிருக்கும் புகார்கள் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகரித்திருப்பதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.
"ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி காலம் முழுவதும் ஜேபிஜே 6,687 புகார்களை மைஜேபிஜே செயலியின் மூலம் பெற்றுள்ளது. அவை பண்டிகை காலத்தின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உட்பட்டது. அனைத்து புகார்களுக்கும் ஜேபிஜே நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சமந்தப்பட்ட 114 வாகன உரிமையாளர்களுக்கு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது", என்று அவர் கூறினார்.
நேற்றிரவு, சிலாங்கூர் மாநில ஜேபிஜே-வின், நோன்பு பெருநாள் சோதனை நடவடிக்கையின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் அத்தகவல்களைக் கூறினார்.
அதே காலக்கட்டத்தில், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை ஜே.எஸ்.பி.தி, அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம், தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், ஏஏடிகே மற்றும் கெசாஸ் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனம் ஆகியவை 1,230 வாகனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மூலம் 788 குற்றங்களுக்காக 686 அறிவிக்கைகள் வெளியிட்டுள்ளதாக, டத்தோ ஏடி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)