பொது

புங் மொக்தார் ரடின் & அவரது துணைவியார் முன்வைத்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி

09/04/2025 03:54 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) --   28 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய ஊழல் வழக்கு தொடர்பில் எதிர்கொண்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளின் தற்காப்பு வாதங்களை இடைநிறுத்தம் செய்யும்படி, கினாபாத்தங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ரடினும் அவரின் துணைவியார் சிசீ இசேத்தே அப்துல் சமாட்டும் முன்வைத்த விண்ணப்பத்திற்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அக்குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தம்பதிக்கு உத்தரவிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிரான சீராய்வு விண்ணப்பம் முடிவு செய்யப்படும் வரை,
அரசு தரப்பு அவ்விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, வழக்கறிஞர் எம். ஆதிமூலன் கூறியதை அடுத்து நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் அம்முடிவைத் தெரிவித்தார்.

தற்காப்பு வாதங்களை இடைநிறுத்தம் செய்வதற்கான விண்ணப்பத்திற்கு அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று எம். ஆதிமூலன் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கிற்கான விசாரணையை இவ்வாண்டு ஆகஸ்ட் 18-இல் இருந்து 20, செப்டம்பர் இரண்டிலிருந்து நான்கு மற்றும் செப்டம்பர் 24-இல் இருந்து 26 ஆகிய தேதிகளில் மேற்கொள்ள ரொஸ்லி நிர்ணயித்தார்.

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி, அத்தம்பதியர் விடுதலை செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.

அதற்கு அனுமதி அளித்து, தங்களுக்கு எதிரான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தற்காப்பு வாதம் புரியும்படி கடந்தாண்டு நவம்பர் 18-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் புங் மொக்தார் மற்றும் சிசீ இசேத்தே தம்பதியருக்கு உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)