பொது

தனிநபரை மிரட்டி பணம் பறித்த குற்றஞ்சாட்டை நான்கு ஆடவர்கள் மறுத்துள்ளனர்

09/04/2025 04:01 PM

ஜார்ஜ்டவுன், 09 ஏப்ரல் (பெர்னாமா) --   கடந்த மாதம், தனிநபர் ஒருவரை மிரட்டி 18,000 ரிங்கிட்டைப் பறித்ததாக, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை நான்கு ஆடவர்கள், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த மாதம் மார்ச் 21-ஆம் தேதி, பினாங்கு, கெலுகோர், டெசா அயர் மாசில் பிற்பகல் மணி 12.30க்கு வேண்டுமென்றே மிரட்டி பணம் பறித்ததாக, பி.வீரன், எஸ்.ரொஹன் ராஜ், எல்.யுவராஜன் மற்றும் எஸ். சிவா ஆகிய நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 384 மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அதில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆடவர்களுக்கும் தலா 7,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் வழக்கு தீர்க்கப்படும் வரை பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டாம் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க மாஜிஸ்திரேட் முஹமட் அஸ்லான் பஸ்ரி அனுமதியளித்தார்.

ஆவணங்களைச் சமர்பிக்க, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, இம்மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)