கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- தங்கும் விடுதி மற்றும் உணவு, பானத் துறையில் ஈடுப்பட்டுள்ள முதலாளிமார்கள் சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கெசோவில் தங்கள் தொழிலாளர்களுக்கான சந்தா செலுத்துவதைத் தவிர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஆண்டு தொடங்கி இவர்களுக்கு எதிராக 880 அபராதங்களும் மற்றும் குற்றசாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களைத் தொடர்ந்து, வாகன பராமரிப்பு மற்றும் அழகு நிலைய சேவை வழங்குவோருக்கு எதிராக 658 குற்றசாட்டுகளும் உற்பத்தித் துறையினருக்கு எதிராக 590 குற்றசாட்டுகளும் பதிவாகி உள்ளன.
இவ்விவகாரத்தில், சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க விரும்பும் அனைத்து முதலாளிமார்களும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையில் வழங்கப்படும் சந்தாவுக்கான பதிவு வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு பெர்கெசோ குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் முஹமட் வலியுறுத்தி உள்ளார்.
"ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் பெர்கேசோவின் அனைத்து அதிகாரிகளையும் ஒன்று திரட்டி முழு முயற்சியை எடுப்போம். அதில் ஏதேனும் கண்டறியப்பட்டால், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று அவர் கூறினார்.
கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற பெர்கெசோவின் 2025 பதிவு மாத வாய்ப்பு தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் முஹமட் அவ்வாறு கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலாளிமார்களுக்கு 4 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஈராண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)