சிரம்பான், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மாதம் பெண் ஓட்டுநர் ஒருவரை தாக்கியதாக நம்பப்படும் இராணுவ உறுப்பினர் சேதத்தை ஏற்படுத்தியதற்காக சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும், தம்மீதான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரொஸ்லி முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ஹபிஸ் அபு பாக்கார் அதை மறுத்து விசாரணை கோரினார்.
28 வயதுடைய பெண் ஒருவருக்கு சொந்தமான காரின் கதவை சேதப்படுத்தியதாக அப்துல் ஹபிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதி, செனாவாங், தாமான் சத்ரியாவில் இரவு சுமார் 10.20க்கு அவர் அக்குற்றத்தை புரிந்துள்ளார்.
குறைந்தபட்சம் ஓராண்டு மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 427-இன் கீழ் Abdul Hafiz குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
2,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ள வேளையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)