பொது

முதல் முறையாக நடத்தப்படும் ஊடக கருத்தரங்கு & ஆசியான்-சீனா பெமிகீர் குழுவில்  200 பேர் பங்கேற்பர்

10/04/2025 02:31 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) - வெள்ளிக்கிழமை முதல் முறையாக நடத்தப்படும் ஊடக கருத்தரங்கு மற்றும் ஆசியான்-சீனா பெமிகீர் குழுவில் சீனாவையும் ஆசியான் வட்டாரத்தையும் சேர்ந்த  அரசாங்க அதிகாரிகள், பிரபல ஊடகத் தலைவர்கள் நிபுணர்கள், 200 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அந்நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவை வலுப்படுத்தவும் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இக்கூட்டம் நடத்தப்படவிருக்கிறது.

மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவும் Xinhua செய்தி நிறுவனமும் இணைந்து "ஆசியான் - சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்'' என்ற கருப்பொருளில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சி பொதுவாகவே ஆசியான் மற்றும் உலகின் முக்கியமான பல்வேறு தலைப்புகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை எளிதாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இக்கருத்தரங்கை Xinhua-வுடன் இணைந்து ஏற்று நடத்துவதற்கான வாய்ப்பிற்கு, பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

"2023-ஆம் ஆண்டு இறுதியில் நாங்கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பது போல, ஸின்ஹுவாவுடனான ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இதை நான் பார்க்கிறேன்," என்றார் அவர்.

1985-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் வழி, பெர்னாமாவும் Xinhua-வும் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்பைத் தொடங்கின.

அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அவ்விரு நிறுவனங்களும் கோலாலம்பூரில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)