இந்தியா, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட மேற்கு மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை இந்தியாவின் வானிலை ஆய்வு மையம், ஐ.எம்.டி நேற்று வெளியிட்டது.
வழக்கத்தை விட முன்னதாகவே வெப்பமான வானிலை ஏற்பட்டதால், இவ்வாரம் பல நகரங்களில் 40 பாகை செல்சியசிற்கும் மேல் வெப்பநிலை பதிவாகியது.
இந்திய தலைநகர் புது டெல்லியில், வெப்பநிலை 40 பாகை செல்சியசிற்கும் மேல் பதிவாகியதால், இந்தியன் கேட் போர் நினைவுச் சின்னத்தைக் காண வருகை புரிந்த மக்கள் குளிர்ச்சிப்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த வெப்ப வானிலையினால் குளிரூட்டிகளின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், ராஜஸ்தானில், அதிக வெப்பநிலையினால் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் பாரம்பரிய மண் பானைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கோடையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருப்பதோடு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை ஏற்படலாம் என்று கடந்த மாதம், ஐ.எம்.டி தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)