பொது

ஆள் கடத்தல் செய்ததாக சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளை இருவர் மறுத்துள்ளனர்

10/04/2025 06:31 PM

ஜோகூர் பாரு, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- கடை ஒன்றின் முன்னாள் உதவியாளரும் வேலையில்லா நபர் ஒருவரும், ஆள் கடத்தல் செய்ததாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில், ஜோகூர் மற்றும் மியன்மாரில் வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறி மூன்று ஆடவர்களை அவர்கள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிபதி சித்தி நோராய்டா சுலைமான் முன்னிலையில் மெண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை செவிமடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஜஸ்பர் யாப் என் வாய் மற்றும் டெஸ்மண்ட் ஆங் வெய் செங் ஆகியோர் அதனை மறுத்தனர்.

ஜோகூர் பாருவில் உள்ள உணவகம் ஒன்றில் தாங்கள் பணிபுரிவதாகக் கூறி ஏமாற்றி, 19 மற்றும் 20 வயதான ஆடவர்களை கடத்தியதாக அவ்விருவர் மீதும் முதல் இரு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அதோடு, ஷ்வெக்கோகோ, மியன்மாரில் வேலை தேடி தருவதாகக் கூறி 21 வயது ஆடவரை கடத்தியதாக ஜஸ்பர் யாப் மீது மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் 2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் செக்‌ஷன் 12-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 24,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதித்து Jasper Yap விடுவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதித்து டெஸ்மண்ட் ஆங் விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)