கோலாலம்பூர், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- வரி தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை விவாதிக்கும் பொருட்டு அமெரிக்கா - ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ய, இவ்வாண்டு ஆசியான் தலைவராக பொருப்பேற்றிக்கும் மலேசியா தனது வெளியுறவு அமைச்சு மூலம் பரிந்துரை செய்யும்.
அந்த உச்சி நிலை மாநாட்டின் போது, அதிபர் டோனால்ட் டிரம்பை சந்திக்க அனைத்து ஆசியான் தலைவர்களும் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
வரி தொடர்பாகஎதிர்விணையாற்றும் நடவடிக்கைகளில் ASEAN ஈடுபடாது என்றும் தென்கிழக்கு ஆசிய வர்த்தக கூட்டமைப்பு வாஷிங்டனுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் குறிப்பிட்டார்.
"விதி அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைதான் சிறந்த வழி என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். மலேசியாவைப் பொறுத்தவரை, வாஷிங்டனில் எங்கள் அதிகாரிகள் உள்ளனர். எங்கள் அமைச்சும் மற்றும் எங்கள் தூதரகம் இரண்டும் ஈடுபட்டுள்ளன. நிர்வாகம், மற்றும் எங்கள் வெளியுறவு அமைச்சரும் வெளியுறவுச் செயலாளருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்,".
இன்று காலை சின்.என்.பி.சி உடனான நேர்காணலில், தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.
ஆசியான்-அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஆசியான் தயாராக இருப்பதாக ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆசியான் பொருளாதார அமைச்சர்களின் சிறப்பு மெய்நிகர் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)