பாச்சோக், 12 ஏப்ரல் (பெர்னாமா) - எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதில் மடானி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
மாறாக, 2023-ஆம் ஆண்டில் கிளந்தானுக்கான ஒதுக்கீடுகள் 58 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 30 விழுக்காடு அதிகரித்து 76 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
திரெங்கானு மாநிலத்திற்கான ஒதுக்கீடுகள், 2023-ஆம் ஆண்டில் 157 கோடி ரிங்கிட்டாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 28 விழுக்காடு அதிகரித்து, 202 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக் காட்டினார்.
MARRIS எனப்படும் சாலைப் பதிவு தகவல் செயல்முறை, TAHAP எனப்படும் பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் நல்வாழ்வு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒதுக்கீடு, தனிநபர் உதவித் தொகை, அறப்பணித் தொகை மற்றும் கூட்டுப் பட்டியலின் கீழுள்ள ஒதுக்கீடுகளும் அதில் அடங்கும்.
இந்த ஒதுக்கீடு, மாநில வருமானத்தின் முக்கிய ஆதாரமாகும்.
கிளந்தான் மற்றும் திரெங்கானுவிற்கு, அவை முறையே மாநில வருமானத்தின் வழியாக சுமார் 50 கோடி ரிங்கிட் மற்றும் 25 கோடி ரிங்கிட் மட்டுமே ஈட்டுகின்றன.
''கிளந்தானுக்கான ஒதுக்கீடுகளில் 30 விழுக்காடு அதிகரிப்பு. திரெங்கானுக்கு 28 விழுக்காடு அதிகரிப்பு. கிளந்தானின் வருமானம் குறைவாகவே உள்ளது. கொஞ்சம் அதிகமான வருமானம் கிடைக்க வேண்டுமென்றால், சிறிது செலவு செய்ய வேண்டும். நீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. சாலை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும். அறப்பணித் தொகை உட்பட கிளந்தான் மாநிலம் பெறும் வருமானம் ஆகும்,'' என்றார் அவர்.
வறுமையைத் துடைதொழிப்பதற்கு, கிளந்தான் மாநிலத்திற்கு 2 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டும் திரெங்கானுவிற்கு 6 கோடி ரிங்கிட்டையும் மத்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)