பிரிக்ஃபீல்ட்ஸ், 15 அக்டோபர் (பெர்னாமா) - தீபாவளிப் பெருநாளை மேலும் தித்திப்பாக்கும் வகையில் மலேசிய இந்தியர்கள் நலன் சார்ந்த ஐந்து நற்செய்திகளை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
அதில் முதன்மையாக, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பகுதி உதவிகள் பெரும் 173 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு கோடியே 28 லட்சம் ரிங்கிட் நிதியை அரசாங்கம் வழங்குவதாக, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் 360-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கத்தின் முழு உதவியைப் பெறுவதால், அவற்றை விடுத்து பகுதி உதவிகள் பெரும் பள்ளிகளுக்கு, இந்நிதி கல்வியமைச்சின் துணையுடன் விநியோகிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விவரித்தார்.
முன்னதாக, கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் உருவான, மடானி கல்வித் திட்டமான, இலவச பிரத்தியேக வகுப்பிற்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் உள்ள 200 தமிழ்ப்பள்ளிகளில், முதற்கட்டமாக இத்திட்டத்தை தொடங்க தமது தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும், இந்த மடானி கல்வித் திட்டத்திற்காக 80 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இதையடுத்து ஒரு கோடி ரிங்கிட் நிதியை உட்படுத்தி, உயர்கல்விக் கழகங்களில் முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு ஈராயிரம் ரிங்கிட்டும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மூவாயிரம் ரிங்கிட்டும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
www.mitra.gov.my அகப்பக்கத்தின் வழி முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், PERANTI MAHASISWA திட்டத்தின் மூலம், பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக் கழகங்களுக்கு செல்லும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கு தலா ஒரு புதிய மடிக்கணினியை வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, 'தர்மா மடானி' திட்டத்தின் கீழ் நாடு தழுவிய அளவில் பதிவு பெற்ற ஆயிரம் ஆலயங்களுக்கு முதற்கட்டமாக 20,000 ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்றும் ரமணன் அறிவித்தார்.
"அத்தொகையைக் கொண்டு அவர்கள் குருக்களுக்கான சம்பளம், ஆலயத்தின் குடிநீர், மின்சார கட்டணம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கும் அப்பாற்பட்டு சமயம் மற்றும் கலாச்சார சார்ந்த நடவடிக்கைகள் மற்றும்பயிற்சிகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் அளித்தால் அடுத்தக்கட்ட உதவிநலன்களையும் ஆலய நிர்வாகத்தார் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது," என்றார் அவர்.
அவ்வாறு சமயம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை முறையாக செய்து அதற்கான கணக்குகளை மித்ராவிடம் முறையாக சமர்ப்பித்தால், இரண்டாம் கட்ட நிதியும் அவ்வாலயங்களுக்கு வழங்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
SUPER:விண்ணப்ப தேதி: 17-10-2025 முதல் 03-11-2025 (பிற்பகல் மணி 3.00)
இதற்கான இணைய விண்ணப்பம் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி பிற்பகல் மணி மூன்றுக்கு தொடங்கி நவம்பர் மூன்றாம் தேதி அதே நேரத்திற்கு நிறைவு பெறும் என்பதால் வழங்கப்பட்ட காலத்திற்குள் ஆலய நிர்வாகத்தினர் இந்த உதவிநிதியை www.mitra.gov.my என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று, பிரிக்பீல்ட்சில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் அத்தகவல்களை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)