பொது

மியன்மாரில் மனிதாபிமான பணிகள்; 35 மருத்துவ அதிகாரிகளை அனுப்பும் மலேசியா

13/04/2025 05:16 PM

ஜோகூர் பாரு, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- மியன்மாரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள, இராணுவப் படையைச் சேர்ந்த 35 மருத்துவ அதிகாரிகளை மலேசிய அரசாங்கம் அனுப்பவுள்ளது. 

அந்நாட்டில்,  மலேசியாவின் கள மருத்துவமனையை தற்காலிகமாக அமைப்பதற்கு அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

மியான்மர் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தப் பிறகு, அதற்கான கொள்ளளவும் இடமும்  தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.  

''இக்கள மருத்துவமனையின் நோக்கம், எலும்பியல் மற்றும் அதிர்ச்சி ரீதியிலான சிகிச்சையை வழங்குவதாகும். எலும்பு முறிவு போன்றவற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இயலாமையும் அபாயத்தையும் குறைப்பதாகும்'', என்றார் அவர்.

இதனிடையே, மியன்மாரின் உள்நாட்டு மக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து மலேசிய மருத்துவ குழுவினரை பாதுகாப்பதற்காக., கள மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்வதையும் மலேசியா கவனத்தில் கொண்டுள்ளதாக  காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார். 

மியன்மாரில், மலேசியாவின்  கள மருத்துவமனையை நிறுவ அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக, நேற்று வெளியுறவு அமைச்சர் கூறியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விவகாரத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)