பொது

இந்தியர்களை உயர்த்தும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்

14/04/2025 04:41 PM

கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) -  இந்தியர்களுக்கான வர்த்தக நிதி உட்பட பல்வேறு திட்டங்களின் வழி நாட்டில் அச்சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்.

கல்வி, வழிபாட்டு தளங்களை ஏற்படுத்துவது மற்றும் வேலை வாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களையும் அரசாங்கம் மேம்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவை, நாட்டில் இந்திய சமூகத்தை வலுப்படுத்தும் எண்ணத்தை நிறைவேற்றுவதோடு, வருங்காலத்தில் இந்திய மக்களின் சமூகபொருளாதார நிலையை மேம்படுத்தவும் மிகவும் முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

சித்திரை புத்தாண்டு மற்றும் விஷூவை முன்னிட்டு தமது முகநூல் பதிவில் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அதோடு, இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் மலையாளிகளுக்கு பிரதமர் தமது சித்திரை புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

பிறந்திருக்கும் புத்தாண்டு அதிகமான மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலனை வழங்கும் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)