ஷா ஆலம், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று அதிகாலை கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான பெண் ஒருவரைக் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்
அந்நபர் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயல்வதற்கு முன்னர் கிள்ளான், ஜாலான் பாயு திங்கியில் 21 வயதான அச்சந்தேக நபர் இருப்பதை தமது தரப்பு கண்டறிந்ததாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் உளவு மற்றும் செயல்பாட்டு துணை இயக்குநர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார்.
அச்சந்தேக நபர், முதலில் போலீஸ் வாகனத்தை மோதியதாகவும், அதன் பின்னர் போலீசார் அவரைத் துரத்திச் சென்று வழிமறித்ததாக அவர் கூறினார்.
அங்கு, போலீசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இச்சந்தேக நபருக்கு 21 வயது. எந்த குற்றப் பதிவும் இல்லை. சிரம்பானில் நடந்த கடத்தல் வழக்கில் சந்தேக நபர் இவர்தான் என்று நாங்கள் நம்புகிறோம். இது தவிர, நாங்கள் பல சோதனைகளை மேற்கொண்டோம். சிலரை கைது செய்துள்ளோம். இச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக, நாங்கள் பல சோதனைகளை மே௶கொண்டோம்,'' என்றார் அவர்.
அச்சந்தேக நபரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரை தானியங்கி கைத்துப்பாக்கியும் ஒரு பாராங் கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, சிரம்பானில் உள்நாட்டு பதின்ம வயது பெண் ஒருவரை கடத்தி, அவரின் குடும்பத்திடம் 20 லட்சம் ரிங்கிட் பிணைத் தொகை கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களில் அச்சந்தேக நபரும் ஒருவராவார்.
சம்பந்தப்பட்ட குடும்பம், பிணைத் தொகையை செலுத்தியதும் ஏப்ரல் 11-ஆம் தேதி அப்பதின்ம வயது பெண் விடுவிக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)