பொது

துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு தேசிய பள்ளிவாசலில் இறுதி மரியாதை

15/04/2025 12:56 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) --    மறைந்த, துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் உடல், இன்று காலை 8.10 மணிக்கு தமது இல்லம் பைத் படாவியிலிருந்து இறுதி மரியாதை செலுத்த தேசிய பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கோலாலம்பூர், தேசிய இருதயக் கழகம், IJN-இல், நேற்று மாலை 7.10 மணிக்கு மறைந்த நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லாவின் உடல், தேசிய இறுதிச் சடங்கின் முறைப்படி, இன்று தேசிய பள்ளிவாசலில் உள்ள வீரர்கள் மையத்து கொள்ளையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ  ஃபடில்லா யூசோப், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் மற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா ஆகியோர், துன் அப்துல்லாவின் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தினர்.   

தேசிய பள்ளிவாசலில் நண்பகல் தொழுகைக்குப் பின்னர், பிரார்த்தனை செய்யப்பட்டு, துன் அப்துல்லாவின் உடல் வீரர்கள் மையத்து கொள்ளையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், காலை 6.30 மணிக்கு துன் அப்துல்லாவின் இல்லத்தில் கூடத் தொடங்கினர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)