பொது

மாவீரர்கள் நல்லடக்கத் தளத்தில் துன் அப்துல்லா படாவியின் உடல் நல்லடக்கம்

15/04/2025 06:15 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் நல்லுடல் இன்று பிற்பகல் மணி 2.30-க்கு தேசியப் பள்ளிவாசலில் உள்ள மாவீரர்கள் நல்லடக்கத் தளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தேசிய நல்லடக்கச் சடங்கு முறையைப் பின்பற்றி அந்த ஐந்தாவது பிரதமர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக, அன்னாரின் இறுதி மரியாதை தொழுகையை தேசியப் பள்ளிவாசலின் தலைமை இமாம், ஏசான் முஹமட் ஹொஸ்னி வழிநடத்தினார்.  

அதைத் தொடர்ந்து துன் படாவியின் பிள்ளைகளான துன் ஜேனே அப்துல்லா, டான் ஶ்ரீ கமாலுடின், நோரி மற்றும் அவரின் கணவர் கைரி ஜமாலுடின்  ஆகியோருடன் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மாவீரர்கள் நல்லடக்கத் தளத்தில் துன் படாவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

அந்த நல்லடக்க சடங்கில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட இரு துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்பும் கலந்து கொண்டனர். 

இன்று காலை மணி பத்து முதல் பிற்பகல் மணி ஒன்று வரையில் மறைந்த துன்  படாவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)