பொது

இனமத பேதமின்றி நடுநிலை தலைவராக சேவையாற்றி மறைந்தார் துன் அப்துல்லா

15/04/2025 05:45 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) --    நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி குறிப்பிடத்தக்கவர் என்று மஇகா-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டான் ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் புகழாரம் சூட்டினார்.

இயல்பாகவே, அன்பும் மரியாதையும் நிறைந்த துன் அப்துல்லா, தமது சேவைக்காலம் முழுவதும் தனக்காக வேலை செய்ய வேண்டாம், மாறாக தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள் என்ற சிந்தனையை நிலைநிறுத்தி நாட்டிற்குச் சிறந்த சேவையை வழங்கியவர் என்று, டான் ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

''அவருடைய காலக்கட்டத்தில், எனக்காக வேலை செய்யாதீர்கள் என்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள் என்ற கொள்கையை வலியுறுத்தி, அவருடன் இருக்கக் கூடிய அமைச்சராக இருந்தாலும், மற்ற அரசாங்க ஊழியர்களாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்து புரிந்துணர்வோடு நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்ற நிலையில் சிந்தனையை ஊட்டிவிட்டார்'', என்று அவர் கூறினார்.

2003 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நாட்டின் ஐந்தாவது பிரதமராக சேவையாற்றிய துன் அப்துல்லா, பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை நல்ல முறையில் வழி நடத்தியதாக, அவர் கூறினார்.

அதே காலக்கட்டத்தில், CEMERLANG, GEMILANG, TERBILANG என்ற கொள்கையின் மூலம் வெற்றிகரமான நாடாகவும், மற்றவர்கள் பார்த்து வரலாற்று மிக்க வெற்றியை அடையக்கூடிய நிலையில் நாடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் பல திட்டங்களை அவர் உருவாக்கியதாக, டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

அதுமட்டிமின்றி, இந்தியர்களின் நல்வாழ்விற்கு பல நலத்திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்த பெருமையும் அவரையே சாரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''இந்திய சமுதாயத்தின் உண்மையான நிலைமையும், இருக்கக்கூடிய அதிருப்திகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டு அதனை சீர் செய்ய வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்வைத்த கருத்துகளை, துன் அப்துல்லா அஹ்மாட் படாவி அவர்கள் ஏற்றுக் கொண்டு, இந்திய சமுதாயத்திற்கு இருக்கக் கூடிய மாற்றுத்திட்டங்கள் கொண்டு வரக்கூடிய நிலையிலே அவருடைய ஆட்சியின் கீழ் முதல்முறையாக The Indian Cabinet Committe For Indian Affairs அமைத்தோம்'', என்றார் அவர்.

தமது காலக்காட்டத்தில், இஸ்லாம் மதத்தில் இருந்த தீவிரவாத சிந்தனைகளை அமைதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதனை முன்னேற்ற பாதையில் கொண்டு சேர்த்தவரும் துன் அப்துல்லா என்றும் டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

''இருக்கக்கூடிய நவீன வளர்ச்சிகளையும் சமயம் ஏற்றுக் கொண்டு, நாட்டிற்கு ஒரு அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இஸ்லாம் அதாரி என்ற கொள்கையை முன்வைத்து அதன் அடிப்படையிலே சில மிதமான நடுநிலையான சமய அரசியலைக் கொண்டு சென்றார்'', என்று அவர் கூறினார்.

தமது சேவைக்காலம் முழுவதும், இனமத பேதமின்றி அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் சிறந்த நடுநிலை தலைவராகவும் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி வாழ்ந்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)