கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், சிரம்பானில் ஏப்ரல் 10-ஆம் தேதி கடத்தப்பட்ட 16 பதின்ம வயதுடைய பெண், வாகனத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் அவரை எளிதில் கடத்தி செல்ல பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது சிரம்பான் 2, அப்டவுன் அவென்யூவில் உள்ள முடித் திருத்தும் நிலையத்திற்கு தமது தாயாருடன் சென்றிருந்த பாதிக்கப்பட்டவர் அருகில் உள்ள பல்பொருள் கடைக்கு தனியாக சென்றதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.
''பயணத்தின்போது, இரண்டு ஆடவர்கள் பாதிக்கப்பட்டவரை வாகனத்தில் ஏற்றி கடத்தினர். பின்னர், அவர்கள் காணாமல் போயினர். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்படவரின் தாயார் அவரின் தந்தையை அழைத்துச் சென்று போலீஸ் புகார் அளித்தார்,'' என்றார் அவர்.
இன்று, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த சற்று நேரத்தில் 20 லட்சம் ரிங்கிட் பிணைப்பணம் கோரி பாதிக்கப்பட்டவரின் தாயாருக்கு தொலைப்பேசி அழைப்பு கிடைத்தது.
அவர்களுடன் பேச்சு நடத்தி, இம்மாதம் 11-ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் 2 லட்சத்து 80,000 ரிங்கிட்டையும் தங்கச் சங்கிலி சிலவற்றையும் வழங்கியுள்ளனர்.
உளவு நடவடிக்கையின் பலனாக, போலீசார் திங்கட்கிழமை மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் என்று அறுவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 80,000 ரிங்கிட் ரொக்கப் பணம் மீட்கப்பட்டது.
எஞ்சிய தொகையை அவர்கள் செலவளித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வழக்கு தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)