பொது

தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் சிறந்த கல்வி முறை குறித்து வலியுறுத்து

15/04/2025 06:45 PM

தைப்பிங், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- 'Guru Pemacu Reformasi Pendidikan' என்ற கருப்பொருளில் மே மாதத்தில் சரவாக்கில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் மேலும் சிறந்த நாட்டின் கல்வி முறை குறித்து வலியுறுத்தப்படவிருக்கிறது.

ஆசிரியர்களை வலுப்படுத்தும் முயற்சியாக இதற்கு முன்னர் அரசாங்கம் அறிவித்த ஆறு முயற்சிகளைத் தவிர்த்து, மிக சிறிய அளவில் அதாவது வகுப்பறையில் பள்ளி முறையை மேம்படுத்துவதில் தங்கள் தரப்பு கவனம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

''இந்தக் கல்வி சீர்திருத்தத்தை ஆசிரியர்களும் நிர்வகிப்பாளர்களும் வழிநடத்த வேண்டும். தற்போது நாங்கள் அமல்படுத்துவது உண்மையிலேயே நாட்டின் கல்விக்கு தாக்கத்தையும் விளைவையும் ஏற்படுத்துவதை உறுதிசெய்ய இது அவசியம்,'' என்றார் அவர்.

2025-ஆம் ஆண்டு தேசிய அளவிலான 'Gerakan Massa #terimakasihcikgu' தொடக்கி வைத்தப் பின்னர் ஃபட்லினா சிடேக் அவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கல்வி துணை அமைச்சர் வோங் கா வோவும் கல்வி தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னானும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நாடு முழுவதிலும் உள்ள 10,236 பள்ளிகளில் தற்போது பணியாற்றும் சுமார் 4 லட்சத்து 30,000 ஆசிரியர்கள், மாணவர்களை மேம்படுத்தும் பணியிலும் பயன்படுத்தப்படுவதற்கு கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இது முழு சமூகத்தின் ஒரு பெரிய நம்பிக்கையாகும். ஏனெனில், பள்ளி மட்டத்தில்தான் நாம் நாட்டை வளர்க்கத் தொடங்குகிறோம். நிச்சயமாக நமது 52 லட்சம் குழந்தைகளை, தங்களின் உடல், உணர்ச்சி, ஆன்மீகம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் முழுமையானவர்களாக மெருகூட்ட முடியும்," என்றார் அஸ்மான்.

இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற Gerakan Massa நிகழ்ச்சியில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)