ஷிலோங், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல்வேறு கலாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் மூன்றாவது முறையாக ஆசியான்-இந்தியா கலைஞர்கள் முகாம் 3.0. இந்தியா, மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷிலோங் மலைப்பகுதியில் நடைபெற்றது.
வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இம்முகாமில் 12 நாடுகளைச் சேர்ந்த 21 ஓவியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
"Echoes of Ramayana: Artistic Journeys Across ASEAN and India” என்ற கருப்பொருளில் இம்முகாம் நடைபெற்றது.
இவ்வாண்டு, ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், கிழக்கு நோக்கிய கொள்கை 10 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை குறிக்கும் வகையிலும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இம்முகாமில் ஒவ்வொரு நாடுகளைப் பிரதிநிதித்து ஒரு ஓவியக் கலைஞர் பங்கேற்கும் நிலையில், இம்முறை மலேசியாவைப் பிரதிநிதித்து, 17 ஆண்டுகளாக ஓவியக் கலைத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் மோஹனா குமரவேலு கலந்து கொண்டார்.
''நான் இதை சுவாரசியமான ஒரு கருப்பொருள் என்று நினைக்கின்றேன். அனைத்து ஆசியான் நாடுகளிலும் தொலைதூர சிந்தனையை நிலைநிறுத்தி இருப்பதை இம்முயற்சி கொண்டுள்ளது. மேலும் மலேசியாவிலும்,ராமாயணத்தின் சுவடுகள் உள்ளன. கலைப்படைப்புகளைத் தவிர்த்து மேலும் பல படைப்புகள் இருந்தன'', என்று அவர் கூறினார்.
10 நாள்களுக்கு நடைபெற்ற இம்முகாமில் நன்கு அறியப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள், குறிப்பாக ஆசியான் வட்டாரத்தையும் இந்தியாவையும் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் கலந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
ஓவியக் கலைஞர்கள் தங்களின் கலைப்படைப்புகளை வெளிப்படுத்தியதுடன், சொற்பொழிவுகள், பட்டறைகள் உட்பட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது தமக்கு சிறந்த அனுபவத்தை வழங்கியதாக, மோகனா கூறினார்.
''நான் நினைக்கின்றேன், இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களும் அதில் பயன்பெற்றுள்ளனர். அனைவரும் ஒன்றாக செயல்பட்டது நன்மையாக இருந்தது'', என்றார் அவர்.
ஆசியான் கலைஞர்களைப் பொறுத்தவரை, இம்முகாம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமல்லாமல் கலையின் நுட்பம் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை நினைவுக்கூறும் ஒரு சங்கமமாக விளங்குவதாக மோஹனா வலியுறுத்தினார்.
மார்ச் 29-ஆம் தேதி புது டெல்லியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்ட இம்முகாம், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை ஷிலோங்கில் நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)