பொது

ஜூரு ஆற்றில் மாசுப்பாடு; மீனவர்களும் கோழி வளர்ப்பவர்களும் பாதிப்பு

16/04/2025 04:56 PM

ஜூரு, 16 ஏப்ரல் (பெர்னாமா) --   பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள ஜூரு ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுங்கை ரம்பை ஆற்றிலிருந்து அடித்துச் செல்லப்பட்டும் கிளைகள் மற்றும் நெகிழிப் பைகளினால் மாசுப்பாடு ஏற்படுவது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜூரு ஆற்றில் ஏற்படும் இம்மாசுப்பாடு, அருகிலுள்ள கம்போங் கோலா ஜூருவிலும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அங்குள்ள மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதாக சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

''முன்பு மாதத்திற்கு ஏறக்குறைய 600 ரிங்கிட் செலுத்தியவர்கள், தற்போது 150 ரிங்கிட் கூடுதலாக செலுத்துகின்றனர். காரணம் இந்த கிலிஞ்சல்கள் செடி கொடிகளிலிருந்து வருகின்ற அமிலவாயுவின் மூலம் பிடிக்கும்போதே இறந்து வருகின்றன'', என்றார் அவர்.

தொடர்ந்து வரும் இப்பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மீனவர்களும் கோழி வளர்ப்பவர்களும் இழப்பீடுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, நிலைமையை மதிப்பிடுவதற்கும், சிக்கலைத் தீர்க்கவும் பினாங்கு மாநில அரசாங்கம், செபராங் பிறை மாநகராண்மை கழகம், சுற்றுச்சூழல், நீர்பாசன மற்றும் வடிகால் துறை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

''ஆகவே, இவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சனைக்கு மாநில அரசாங்கம், சுற்றுச்சூழல் இலாகா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இங்கே ஏறக்குறைய 300 மீனவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. அவர்களுடைய மாத வருமானமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது'', என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் கோழி வளர்ப்பவர்களுக்கும் அரசாங்கம் உதவி அல்லது இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று பி.ப.ச கேட்டுக் கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)