பொது

TABUNG SELANGOR PRIHATIN; 47 லட்சத்து 40,000 ரிங்கிட் நிதி திரட்டு

16/04/2025 05:22 PM

ஷா ஆலாம்,16 ஏப்ரல் (பெர்னாமா) - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக  கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட Tabung Selangor Prihatin வழி, அம்மாநில அரசாங்கம் 47 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் நிதியை திரட்டியுள்ளது. 

இந்த துயரச் சம்பவம் குறித்து அக்கறை கொண்ட பல்வேறு தரப்புகளின் பங்களிப்புகள் மற்றும் மாநில அரசு மேற்கொண்ட மீட்பு முயற்சிகளின் மூலம் இத்தொகை திரட்டப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளைப் பழுதுபார்த்தல், 
தற்காலிக வீடுகளை வழங்குதல் மற்றும் தேவையான பண உதவிகளை வழங்கும் நோக்கில் மாநில அரசாங்கத்தால் Tabung Selangor Prihatin உருவாக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விளக்கமளிப்பு கூட்டத்திற்கு  தாம் தலைமையயேற்றதாக முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அமிருடின் கூறியிருந்தார். 

இச்சம்பவத்தின் தாக்கத்தை கையாள்வதிலும்  பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு முன்னுரிமைக் கொடுப்பதை உறுதி செய்வதிலும் மாநில அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள மற்றும் எடுக்கவிருக்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவே அந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, தங்களின் குடியிருப்பின் நிலைமை பாதுகாப்பாக இருப்பது உறுதியான பின்னர்,  பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து, 

புத்ரா ஹைட்ஸ்  மற்றும் கெமலியா மண்டபத்தில் செயல்பட்ட  இரு தற்காலிக நிவாரண மையங்கள் மூடப்பட்டதாகவும் அமிருடின் ஷாரி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)