பொது

பேரங்காடியில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

16/04/2025 05:46 PM

சிரம்பான்,16 ஏப்ரல் (பெர்னாமா) - நேற்று மாலை நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள பேரங்காடி ஒன்றில் பாராங் கத்தியைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் போர்ட்டிக்சன் சுற்று வட்டாரத்தில் மாலை மணி 5-க்கு, 35 முதல் 47 வயதுக்குட்பட்ட அம்மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது அச்சந்தேக நபர்கள் பயன்படுத்திய பாராங் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வன்முறை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளை அவ்வாடவர்கள் கொண்டிருப்பது, விசாரணையில் கண்டறியப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ஹட்டா சே டின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326-இன் கீழ் விசாரிக்க அம்மூவரும் இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 14-ஆம் தேதி, பேரங்காடி ஒன்றில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலினால் ஆடவர் ஒருவர் காயமடைந்ததாக முன்னதாக புகார் அளிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)