பொது

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு நன்கொடை

17/04/2025 07:56 PM

சுபாங் ஜெயா, 17 ஏப்ரல் (பெர்னாமா) --   இம்மாதம் ஏப்ரல் முதலாம் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 37 பள்ளிகளைச் சேர்ந்த 128 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்களுக்குக் கல்வி அமைச்சு தலா ஆயிரம் ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியது.

துன் உசேன் ஓன் ஆசிரியர் அறவாரியம் மற்றும் தேசிய டிடிக் அறவாரியத்தின் ஆதரவுடன், 21 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 16 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

"எனவே, ஒட்டுமொத்தமாக, மலேசிய கல்வி அமைச்சின் கடப்பாட்டின் அடிப்படையில் உதவிகள் நல்கப்பட்டன. அவ்வப்போது அவர்களுக்கு ஆதரவு, குறிப்பாக ஆலோசனைகள் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்", என்று அவர் கூறினார்.

புதன்கிழமை SJ 23 இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், ஃபட்லினா சிடேக் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு, கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ, அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹசிம், கல்வி தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான், தொழில்முறை மேம்பட்டு துறை துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அசாம் அஹ்மாட் மற்றும் பள்ளி செயல்பாட்டு துறை துணைத் தலைமை இயக்குநர் சைனால் அபாஸ் ஆகியோரும் வருகை புரிந்திருந்தனர்.

மேலும், 128 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற உபகரணங்களையும் பெற்றதாக ஃபட்லினா குறிப்பிட்டார்.

இதனிடையே, மாணவர்கள் சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு, உணர்வுபூர்வமான ஆதரவும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுவதாக சைனால் அபாஸ் தெரிவித்தார்.

"இருப்பினும், அவர்கள் பி.பி.எஸ்-இல் இருந்த போது, பள்ளி ஆதரவு குழு என்று ஆலோசனை ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை அடிப்படையில் ஆதரவு அளிக்கவும், இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை அமைதிப்படுத்தவும் தொடக்கத்தில் இருந்தே கல்வி அமைச்சிடம் இருந்து உதவிகளைத் திரட்டினோம்", என்றார் அவர்.

உதவி பெறுவதில் இருந்து தவறிய எந்தவொரு தரப்பினரும் உடனடியாக சிலாங்கூர் கல்வித் துறை அல்லது அருகில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)