அலோர் ஸ்டார், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- புதிய முறையில், போலியான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.
13 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் கூட போதைப்பொருள் கலந்த மின்னியல் சிகரெட்களைப் பயன்படுத்துவதால், இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்று தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
சில மாநிலங்கள் வேப் விற்பனையைத் தடை செய்ய முயற்சி எடுத்துள்ளதையும் அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் அயோப் கான் சுட்டிக்காட்டினார்.
அதே முயற்சியை இதர மாநிலங்களும் மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
“மத்திய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்ற காத்திருக்கும் வரை, மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கலாம். காரணம் இவற்றை விற்பனை செய்வதற்கான உரிமம் ஊராட்சியின் கீழ் வழங்கப்படுகிறது. சில மாநிலங்கள் ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளன. முழுமையாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் உள்ளது,“ என்றார் அவர்.
வியாழக்கிழமை, கெடா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் AYOB KHAN அவ்வாறு கூறினார்.
2016-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஜோகூர் மாநிலத்தில் மின்னியல் சிகரெட்களை விற்பனை செய்யவும் அதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)