கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூரில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றினால், 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததோடு கிளைகளும் முறிந்தன.
இந்நிலையில், பொதுப் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் பொருட்டு, 42 அதிகாரிகளைக் கொண்ட 'First Rider' உட்பட மூன்று செயல்பாட்டுக் குழுக்களை நியமித்து கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது.
பொது சாலைகளின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றி துப்புரவு பணிகளை சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களும் மேற்கொண்டதாக, இன்று தனது முகநூல் பதிவில் டி.பி.கே.எல் தெரிவித்தது.
அண்மைய காலமாக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மரங்கள் சாய்ந்து பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை கையாளும் வகையில் அமலாக்கத் தரப்பினர் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அக்கழகம் கூறியது.
பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சாலைப் பயனர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்கும், அனைத்து மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு செயல்முறைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை டி.பி.கே.எல் உறுதி செய்து வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)