கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- தற்போது பரபரப்பாக உள்ள கம்போங் பாரு குடியிருப்பு பகுதி விவகாரம் குறித்து, அடுத்த வாரம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
இதில் தொடர்புடைய குடியிருப்பாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனத்திற்கு இவ்விவகாரம் குறித்த உண்மையான விளக்கக்கதை அளிக்கும் வகையில், இச்சந்திப்பு நடத்தப்படவிருப்பதாக திதிவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
''எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் நான் ஒரு சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவேன். அரசு சாரா நிறுவனத்தினர் இங்கு வருவார்கள். அவர்களுக்கு உண்மையில் புரியவில்லை. எனவே, இரு தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் நான் அதைத் தெளிவாக விளக்குவேன். எனக்கு நன்றாகப் புரிகிறது. ஏனெனில், தொடக்கத்தில் நான் மக்கள் பிரதிநிதியாக ஆனபோது, பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு; நான் ஏற்கனவே கம்போங் பாரு மக்களிடம் பேசியிருந்தேன். அவர்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர்கள் கையெழுத்திட விரும்பினர். எனவே நான் தொடக்கத்திலிருந்து இறுதி வரை விளக்கமளிக்க விரும்புகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர், கம்போங் பாருவில் நடைபெற்ற தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சின் திதிவங்சா நாடாளுமன்ற நோன்புப் பெருநாள் பொது விருந்துபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வரிசை வீடுகளை உள்ளடக்கிய கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டத்தின் விவகாரம் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது.
வழங்கப்படும் இழப்பீட்டு தொகையில் அதிருப்தி மற்றும் குடியிருப்பாளர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து இவ்விவகாரம் அமலாக்கத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)