பொது

பாண்டா ஜோடி மே மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்

19/04/2025 04:47 PM

புத்ராஜெயா, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- 2014ஆம் ஆண்டு தொடங்கி தேசிய மிருகக்காட்சி சாலையின் பாண்டா கரடிகள் பராமரிப்பு மையம், பிகேபிஜி-இல் வைக்கப்பட்டிருந்த ஃபூ வா மற்றும் ஃபெங் யி எனும் பாண்டா ஜோடி வரும் மே மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படவிருக்கின்றன.

இவ்வாண்டு தொடங்கி 2035ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு புதிய ராட்சத பாண்டா ஜோடியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மலேசியா கைழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து,அந்த பாண்டா ஜோடி சீனாவிற்கு அனுப்பப்படவிருப்பதாக, இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, என்.ஆர்.இ.எஸ் தெரிவித்தது.

கடந்த புதன்கிழமை சீன அதிபர் ஸி ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தபோது மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

திரும்ப அனுப்பப்படுவதற்கு முன்னர், அனைத்துலக அனுமதி நிபந்தனைகளையும், கூண்டு பயிற்சியையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, தயார்நிலை பணியாக, ஃபூ வா மற்றும் ஃபெங் யி-இன் சிறந்த நிலையிலான சுகாதாரத்தை உறுதிசெய்ய அவை ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி தனிமைப்படுத்தப்படுகின்றன.

பிகேபிஜி-இல், தனிமைப்படுத்தப்படும் காலம் முழுவதிலும், ஃபூ வா மற்றும் ஃபெங் யி-ஐ அருகில் காண வருகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

எனினும், குறிப்பிட்ட நேரங்களில் பிகேபிஜி கற்றல் மையத்தில் இருந்து அவற்றைக் காண்பவதற்கான வாய்ப்பு உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)