பொது

ஜி. சரவணனுக்கு உதவிக்கரம் நீட்ட சுகாதார அமைச்சு தயார்

19/04/2025 05:49 PM

கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 50 கிலோமீட்டர் நடைப் போட்டி பிரிவில் தங்கம் வென்ற நாட்டின் முன்னாள் தடகள வீரர் ஜி. சரவணனுக்கு தேவைப்பட்டால் உதவிக்கரம் நீட்ட சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.

தேசிய காற்பந்து ஜாம்பவான் டத்தோ மொக்தார் டஹாரிக்கு ஏற்பட்ட, தசை வலுவிழப்பு எனப்படும் 'Motor Neuron', எம்.என்.டி நோய் தற்போது சரவணனையும் தாக்கியுள்ளது.

விளையாட்டாளர்களின் நலனை உறுதி செய்யும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இது அமைந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

''இது குறித்து எனக்குத் தெரியும். பத்தாவது பிரதமரின் கீழ் செயல்படும் மடானி அரசாங்கத்தின் வழக்கம் இது. தேவை ஏற்படும் பட்சத்தில் நாங்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார் அவர்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணனுக்கு, பிரதமரின் 10,000 ரிங்கிட் நிதியுதவியை அவரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபர்ஹான் ஃபௌசி நேற்று வழங்கினார்.

சனிக்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் சுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)