பொது

முழுமையில்லாத ஜாலுர் ஜெமிலாங்கைக் காட்சிப்படுத்திய நிறுவனம் மீது போலீஸ் புகார்கள்

20/04/2025 05:28 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பொருள்கள் கண்காட்சியில் பங்கெடுத்த குழந்தை உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்று, முழுமையில்லாத ஜாலூர் கெமிலாங்கைக் காட்சிப்படுத்தியது தொடர்பில் இதுவரை ஐந்து போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளின் பிரதிநிதிகளால் போலீஸ் புகார் அளிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

1963ஆம் ஆண்டு முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டம், சட்டம் 4141, 1949ஆம் ஆண்டு தேசிய சின்னங்களைக் காட்சிப்படுத்தும் கட்டுப்பாட்டு சட்டம், சட்டம் 193 ஆகியவற்றின் கீழ் உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நடவடிக்கை எடுக்க அந்த புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

எந்தவோர் ஊடக நிறுவனமோ அல்லது பெரிய அளவிலான நிகழ்ச்சி ஏற்பாட்டாளரோ ஜாலூர் கெமிலாங்கின் நெறிமுறை மற்றும் அதன் பயன்பாட்டை அறிந்திருக்க வேண்டும் என்று மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி வலியுறுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஜாலூர் கெமிலாங்கை பயன்படுத்தும் முறையை மலேசிய தகவல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கண்டறியலாம் என்று அவர் விளக்கினார்.

"இந்த வழக்கில் பி.டி.ஆர்.எம் விசாரிக்க வேண்டிய பல விவகாரங்கள் உள்ளன. விசாரணை முடிந்ததும் விசாரணை அறிக்கை அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் தொடர் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும். எனவே, நடவடிக்கை எடுப்பதை அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறோம். ஜாலூர் கெமிலாங் நம் அனைவருக்கும் பெருமை அளிக்க கூடியது. அது நமது இறையாண்மையின் சின்னம் என்பதால் உறுதியான நடவடிக்கை தேவை," என்று அவர் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)