புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- சமூக பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) உறுப்பினர்கள் மத்தியில் தொற்றா நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.
2024ஆம் ஆண்டு முழுவதிலும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 பேர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கிட்டத்தட்ட 23 லட்சம் பெரியவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகிய மூன்று வகையான முதன்மை தொற்றா நோய்களுக்கு ஆளாகுவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெர்கேசோவின் அறிக்கையைக் கோடி காட்டி அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை நோக்கி செயல்பட முக்கிய அம்சமாக இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து பெர்கேசோ உறுப்பினர்கள் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஓர் இனமும் நாடும் வலுவுடன் இருக்க வேண்டும் என்றால், தொழிலாளர்கள் உடல் அளவில் மட்டுமின்றி மன ரீதியிலும் வலுவுடன் இருக்க வேண்டும். அதனால்தான், ஓடுவதோ அல்லது இதுபோன்ற நடவடிக்கையோ மிகவும் சிறந்தது என்று நான் நினைக்கின்றேன்," என்று அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் தொற்றா நோயினால் உடல் உறுப்பு செயலிழந்த பெர்கெசோ உறுப்பினர்களின் எண்ணிக்கை 26.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலை, நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)