கோலா லங்காட், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று சனிக்கிழமை சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஓர் உணவகத்தில் பாராங் ஏந்திய ஆடவரை நோக்கி பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உள்ளூர் ஆடவர் ஒருவர், மருத்துவ அதிகாரியிடம் பாராங் கத்தியைக் காட்டி கோபத்துடன் பேசியது குறித்து பிற்பகல் மணி 3.31 அளவில் பொது மக்கள் தங்களுக்கு புகாரளித்ததாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் முஹமாட் அக்மால்ரிசால் ரட்சி தெரிவித்தார்.
அந்த ஆடவர் பந்திங்கில் தமது வீட்டில் கோபமாக இருந்ததாக, நண்பகல் மணி 12.05 அளவில் பாதிக்கப்பட்டவரின் சகோதரரிடம் இருந்து அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் கோலா லங்காட் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கு விரைந்ததாகவும், பிற்பகலில் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக அந்நபரை சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 307 மற்றும் செக்ஷன் 37 உட்பட 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் செக்ஷன் 39-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது கோலா லங்காட் ஐ.பி.டி-இன் நடவடிக்கை அறையையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அக்மால்ரிசால் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)