மாஸ்கோ, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈஸ்டர் தினத்தை ஒட்டி உக்ரேன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருக்கிறார்.
ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை மாலை மணி 6 தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 30 மணி நேரங்களுக்கு அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், முதல் முறையாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யப் படைகள் உக்ரேனின் முழுப் பகுதியிலும் முன்னேறி வருவதாகக் கூறிய புதின், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்தை உக்ரேன் பின்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறு தவறும் பட்சத்தில் அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்ள புதின் கட்டளையிட்டுள்ளார்.
போர்நிறுத்தத்தை பின்பற்றுவதில் உக்ரேனின் நேர்மையையும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவும் இக்காலகட்டம் வழிவகுக்கும் என்று அவர் விவரித்தார்.
இதனிடையே, புதின் அறிவித்த, தற்காலிக போர்நிறுத்தத்தை 30 நாள்களுக்கு நீட்டிக்க உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.
புதினின் மிகக் குறுகிய கால போர் நிறுத்தம், அவரின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறுகிறார்.
நிபந்தனையற்ற 30 நாள்கள் போர்நிறுத்தத்தை உக்ரேன் முன்னதாக முன்மொழிந்திருந்த நிலையில், 39 நாள்கள் ஆகியும் ரஷ்யா அதற்கு பதிலளிக்கத் தவறியிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
முழு போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டால், உக்ரேனும் அதே வழியில் செயல்படும் என்று செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால போர்நிறுத்த காலம் நிரந்தர அமைதிக்கான வாய்ப்பை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)