பொது

பி.கே.ஆர் தேர்தல்;லெம்பா பந்தாய் கிளைத் தலைவராக நீடிக்கும் ஃபஹ்மி 

20/04/2025 05:05 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சி தேர்தலில், அதன் தகவல் பிரிவித் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் போட்டியின்றி பெற்றதைத் தொடர்ந்து, லெம்பா பந்தாய் கிளைத் தலைவராக தமது பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அக்கட்டியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவையும் உட்படுத்திய அந்த முடிவுகள் 2025ஆம் ஆண்டு பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் அறிவிக்கப்பட்டன.

இரண்டாவது முறையாக கிளைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்ட தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ  ஃபஹ்மி ஃபட்சில் 2028ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.

மேலும்,லெம்பா பந்தாய் கிளையின் துணை மற்றும் உதவித் தலைவர் பதவிகளை  அப்துல்லா இஷர் முகமது யூசோஃப்பும் சான் ஃபூய் லாய்யும் போட்டியின்றி வென்றனர்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிவடையும் வரை எந்தவொரு தரப்பும் இப்பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சமர்பிக்கவில்லை என்று ஃபஹ்மி கூறினார்.

மேலும், வரும் மே மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள கட்சி தேர்தலில் மத்திய தலைமைத்துவ மன்றம் எம்.பி.பி-கான பதவிக்கு போட்டியிடவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தபட்ட கட்சியின் எம்.பி.பி, மத்திய மகளிர் தலைமைத்துவ மன்றம், மத்திய இளைஞர் தலைமைத்துவ மன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் மே 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)