புத்ராஜெயா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- கெஅடிலான் தேர்தல் என்பது கட்சியின் உள் விவகாரம் என்றும், அதற்கும் அரசாங்க நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்ற ஊகங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
மேலும், அமைச்சரவையில் பதவிகள் தொடர்பான அனைத்து பரிசீலனைகளும் நிர்வாகத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றவே தவிர, அரசியல் நகர்வுகள் அடிப்படையில் அல்ல என்று கெஅடிலான் கட்சி தலைவருமான அவர் தெளிவுபடுத்தினார்.
''இது ஒரு கட்சி அடிப்படையிலான தேர்தல். இத்தேர்தல் சிறப்பாக நடத்தப்பட்டது. ஏதேனும் பிரச்சனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அவை புதன்கிழமை நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்தில் எழுப்பலாம். ஆனால் இது ஒரு கட்சி கூட்டம், மேலும் மாநில அரசு அல்லது மத்திய அரசாங்கம் வழக்கம் போல் செயல்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை'', என்று அவர் கூறினார்.
இன்று உயர்க்கல்வி அமைச்சின் கட்டிடத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடயே, 2025-ஆம் ஆண்டு கெஅடிலான் கட்சியின் கிளை அளவிலான இளைஞர் மற்றும் மகளிர் அணிக்கான தேர்தல்களில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய முடிவுகள் குறித்து கருத்துரைத்த பிரதமர், பி. ரம்லியின் Tunggu Sekejap என்ற பாடலின் ஒரு வரியை மேற்கோள் காட்டி நகைச்சுவையாகக் கூறினார்.
இம்முறை நடைபெற்ற கெடிலான் கட்சியின் தொகுதித் தேர்தலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக செத்தியாவங்சா தொகுதியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கட்சியின் உதவித் தலைவரும் இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சருமான நிக் நஸ்மி நிக் அஹ்மாட், இயக்குநரும் நடிகருமான டத்தோ அஃப்லின் ஷாயுகியிடம் தோல்வியுற்றார்.
இக்கிளைத் தேர்தலில் நிக் நஸ்மிக்கு 563 வாக்குகள் கிடைத்த வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அஃப்லின் 631 வாக்குகள் கிடைத்திருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)