ஜார்ஜ்டவுன், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, இந்தோனேசிய பெண் ஒருவரிடமிருந்து வழிப்பறிக் கொள்ளைச் செய்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை குளிரூட்டி பரிமாரிப்பாளர் ஒருவர் இன்று ஜார்ஜ்டவுன் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
1,000 ரிங்கிட் ரொக்கம், IPHONE ஏழு ரகத் திறன்பேசி, கடப்பிதழ் மற்றும் கடன்பற்று அட்டை அடங்கிய, LONGCHAMP முத்திரையிலான நீல நிற கைப்பையை நொவிதா பட்ஜோ எனும் பெண்ணிடமிருந்து வழிப்பறிக் கொள்ளை செய்ததாக, எ.தினேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, மாலை மணி 4.30 அளவில், ஜாலான் கோலா கங்சார் சாலையோரத்தில் அப்பெண்ணுக்கு உடனடி காயம் ஏற்படும் என்ற அச்சத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியதாகவும் குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம், செக்ஷன் 392-இன் கீழ் இக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பத்தாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிபதி ஜுரைடா அப்பாஸ் விடுவித்தார்.
ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற உத்தரவுகளையும் நீதிபதி பிறப்பித்தார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)