கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- சுமார் 35 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பணமோசடி வழக்கில் டான் ஶ்ரீ மற்றும் டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்டவர்கள் உட்பட மேலும் ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
363.02 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட மூன்று டுரியான் தோட்டங்கள், ஒரு தங்கும் விடுதி, ஒரு மேம்பாட்டு நிறுவனம், ஒரு செம்பனை பதப்படுத்தும் தொழிற்சாலையை உள்ளடக்கி, MPI International Group முதலீட்டு, அண்டை நாட்டிலுள்ள போன்சி முதலீட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, புக்கிட் அமானின் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுக் குழு, அம்லா தலைவர் டத்தோ முஹமட் அலி கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில், இம்மாதம் 18 முதல் 21-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சம்பந்தப்பட்ட எம்.பி.ஐ முதலீட்டுத் திட்டத்தின் நிறுவனருடன் தொடர்புடையதாக நம்பப்படும் டான் ஸ்ரீ, டத்தோ ஶ்ரீ பட்டங்களைக் கொண்ட தொழில்முனைவோர் உட்பட ஐவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட டான் ஶ்ரீ மற்றும் டத்தோ ஶ்ரீ ஆகியோர், அக்கும்பலின் பிரதிநிதிகளாகவும், வர்த்தக பங்காளிகளாகவும் செயல்பட்டது, முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனிடையே, சட்டவிரோத பணத்தை முதலீடுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதால், மேல் விசாரணை இன்னும் தொடர்வதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)