பொது

இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலப் பதிவு வியாழக்கிழமை நடத்தப்படும்

22/04/2025 05:39 PM

கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) --   கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் குறித்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையிலான வாக்குமூலப் பதிவிற்காக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் வரும் வியாழக்கிழமை அழைக்கவுள்ளது.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 36 உட்பிரிவு ஒன்றின் கீழ் அந்த முன்னாள் பிரதமர் தமது சொத்துகளை அறிவித்தது தொடர்பில் இம்முறை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

''வாக்குமூலப் பதிவிற்காக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை எஸ்.பி.ஆர்.எம் அழைக்கவுள்ளது. சொத்துகளை எங்களிடம் அறிவித்தது தொடர்பில் இம்முறை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படும்'', என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற நேர்மை குணம் நிறைந்த அதிகாரிகளுக்கான 11-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2021-ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் தொடங்கி 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரை பதவியில் இருந்தபோது மலேசியக் குடும்பத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவு உட்பட நிதி பெற்றது தொடர்பில் கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கு குறித்து, பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக டான் ஶ்ரீ அசாம் கூறினார்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் மற்றும் 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் எதிர்ப்பு சட்டம், ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)