இஸ்தான்புல், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது.
மரியாதை நிமித்தமாக அன்காராவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப்பிடம், அந்நாட்டு துணை அதிபர் துருக்கி செவ்டெட் யில்மாஸ் அந்த விருப்பத்தை வெளிபடுத்தியுள்ளார்.
2025-ஆம் ஆண்டு ஆசியான் மாநாட்டிற்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று துருக்கி நம்பிக்கை கொண்டுள்ளதாக எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் மலேசியாவின் தயார் நிலைகளை அறிந்து கொள்வதிலும் துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது.
நீர் நிர்வகிப்பு உட்பட எரிசக்தி, தொழில்நுட்பம் துறைகளில் துருக்கியின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை கற்றுக் கொள்வதில் மலேசியா கொண்டிருக்கும் ஆர்வத்தையும் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது ஃபடில்லா வெளிப்படுத்தினார்.
ஐரோப்பா மற்றும் உலகளவில் தி.பி.பி எனப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நாடுகளில் துருக்கியும் அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)